வழிகாட்டல்கள், பரிந்துரைகள் அடங்கிய ஆவணமொன்றை வெளியிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தேசம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

வழிகாட்டல்கள், பரிந்துரைகள் அடங்கிய ஆவணமொன்றை வெளியிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தேசம்

(நா.தனுஜா)

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய ஆவணமொன்றை வெளியிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் ஃபர்ஸானா ஹனீபா, நிமல் புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி ஜெஹான் குணதிலக ஆகியோரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் ஜனநாயக மற்றும் சிவில் இடைவெளிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அவர்களது பணியுடன் தொடர்புபட்ட வகையில் அடக்குமுறைகளுக்கும் மீறல்களுக்கும் உட்படுத்தப்படல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் விசேட தேவையுடையோர் முகங்கொடுத்துவரும் சவால்கள் உள்ளடங்கலாக அண்மையகால அச்சுறுத்தல் நிலைவரம் தொடர்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அதேபோன்று இவ்விடயங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு தாம் கொண்டிருக்கும் ஆர்வம் குறித்தும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

மேலும் கடந்த கால அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களின் செயற்திறனான வெளிப்படுத்தல்களின் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்திய சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கும் செயன்முறை மற்றும் அவசர தொலைபேசி சேவை என்பன வலுப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினர்.

இவற்றுக்குப் பதிலளித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மற்றும் உறுப்பினர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல்களையும் பரிந்துரைகளையும் வெளியிடுவதற்குத் தாம் திட்டமிட்டிருப்பதாகவும், அவை தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment