உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கும், தங்களுக்குமிடையில் கருத்து வேறுபாடு உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை கத்தோலிக்க ஆயர் பேரவை நிராகரித்துள்ளது.
ஜேர்மனியின் ஊடகத்திற்கு ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களையே கத்தோலிக்க ஆயர் பேரவை நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை திட்டமிட்டவர்கள் அது குறித்த எச்சரிக்கைகளை நிராகரித்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பது தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கும் தங்களுக்கும் இடையில் மாறுபட்ட கருத்துக்கள் எதுவுமில்லை என கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருநாகல் ஆயர் அதிவணக்கத்திற்குரிய அன்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று 14 மாதங்கள் ஆகின்றன. எனினும் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதில் தாமதங்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபரில் ஜனாதிபதி குருநாகலிற்கு விஜயம் மேற்கொண்டு என்னை சந்தித்தார். நான் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் விசாரணைகளை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன் என ஆயர் பெரேரா தெரிவித்துள்ளார்.
கர்தினாலின் நிலைப்பாடு குறித்தும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினதும் நிலைப்பாட்டிற்கும் இடையில் வேறுபாடு இருக்க முடியாது. கர்தினால் 15 பேரைக் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளார் எனவும் ஆயர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஆறு பேர் கொண்ட குழு 2021 ஜனவரி 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதியே ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவியை கோரவுள்ளதாக தெரிவித்துள்ளதால் சர்வதேச விசாரணை குறித்த சர்ச்சை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருநாகல் ஆயர் அதிவணக்கத்திற்குரிய அன்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தனது விசாரணை அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் கைவிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment