(இராஜதுரை ஹஷான்)
நிகழ்நிலை காப்புச் சட்டமூல வரைபில் 32 திருத்தங்களை மேற்கொள்வதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் ஆகியன சட்டமானால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மரணிக்கும். அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை சட்டமாக்க இடமளித்தால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் ஊடகங்களின் வகிபாகம் கேள்விக்குள்ளாக்கப்படும். ஊடகங்களின் பிரசார நடவடிக்கைகளை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர் அடங்கிய குழுவே தீர்மானிக்கும்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை என அரசாங்கம் குறிப்பிட்டது. அரசியலமைப்புக்கு முரணான வகையில் சட்டமூல வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் (எதிர்க்கட்சிகள்) கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினோம். இந்த சட்டமூலத்துக்கு எதிராக 40 இற்கும் அதிகமான மனுக்கல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கல் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரசாங்கத்தின் சார்பில் 32 திருத்தங்களை முன்வைத்ததாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார். அத்துடன் அந்த 32 திருத்தங்களும் பாராளுமன்ற குழுநிலை வேளையின்போது திருத்தம் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் மன்றுக்கு உறுதியளித்துள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தாமல் இருந்திருந்தால் அரசியலமைப்புக்கு முரணான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டிருக்கும். அரசியலமைப்பு தொடர்பில் எவ்வித தெளிவும் இல்லாமல் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியிருப்பார்கள்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு இணையாக பாரதூரமான முறையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது என்பதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இருந்து சட்டமூல உள்ளடக்கத்தை சபாநாயகர் நீக்கினார்.
அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் சட்டமானால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மரணிக்கும். அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment