ஜனாதிபதியின் அறிவிப்பினால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு புஸ்வாணமாகியுள்ளது : ரணில் குழந்தைகளை தூக்கி முத்தமிட்டு மக்களை ஏமாற்றுபவரல்ல என்கிறார் ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 24, 2023

ஜனாதிபதியின் அறிவிப்பினால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு புஸ்வாணமாகியுள்ளது : ரணில் குழந்தைகளை தூக்கி முத்தமிட்டு மக்களை ஏமாற்றுபவரல்ல என்கிறார் ரங்கே பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பின் மூலம் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு புஸ்வாணமாகியுள்ளது. எந்தத் தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பின்வாங்கியதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் விடுவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்து வந்ததுடன் பொய்ப் பிரசாரங்களையும் மேற்கொண்டு வந்திருந்தனர்.

ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்பதுடன் 2025 இல் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனத்தின்போது பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் தற்போது புஸ்வாணமாகியுள்ளது.

அதேநேரம் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத சிலர் தற்போது தேவையற்ற விமர்சனங்களை செய்துவருகின்றனர். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில ஊடகங்களும் இந்த அறிவிப்பை நகைச்சுவையாக அறிவிப்பு செய்வதை காணக்கூடியதாக இருந்தது.

ஆனால் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் பொய் அறிவிப்புகளை செய்யமாட்டார். அவர் எப்போதும் உண்மையை உரைத்து வந்ததால் மக்களுக்கு அவரை புரிந்துகொள்ள முடியாமல் போயிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகளைப் போன்று ரணில் விக்ரமசிங்க குழந்தைகளை தூக்கி முத்தமிட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதனால் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததுபோன்று உரிய காலத்தில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். அதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப்போன்று ஜனாதிபதித் தேர்தலையும் இறுதி நேரத்தில் நடத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இருக்கும் பணத்தை செலழிக்க முடியாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படமால் விட்டால் அது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் தற்போது கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு நாட்டுக்கு முக்கியமான தேர்தலுக்கு செலவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment