நிந்தவூரில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் தொடர் முயற்சியினால் முற்றாக அகற்றப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவச் சோதனைச் சாவடியானது நிந்தவூர் பிரதான வீதியில் காணப்படும் பிரதேச சபையின் பொறுப்பில் இருந்த கட்டடத்தின் சாவிகள் வழங்கப்படவே நிரந்தர இராணுவ முகாமாகிப்போனது.
இதன் நிறுவுகையின் பின்னர் திரை மறைவில் அரங்கேறிய பல்வேறு பாதகமான செயற்பாடுகளை அறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் குறித்த விடயங்களை முன்னாள் ஜனாதிபதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான கோட்டாபய ராஜபக்ஷ, அன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கலாக இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மிக காத்திரமாக போதைப் பொருள் மாபியாக்களுடன் இராணுவ முகாமுக்கு உள்ள தொடர்புகளை முன்வைத்து இவ் இராணுவ முகாமை அகற்றக் கோரியிருந்தமை இவ் வரலாற்றுக்கான முதற் புள்ளியாய் அமைந்தது.
பின்னர் அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் இவ் விடயத்தினை எத்திவைத்த பைசல் காசிம், அம்பாரை மாவட்ட மற்றும் நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இராணுவ முகாமை அகற்றுவதற்கான முன்மொழிவுகளை செய்திருந்ததோடு (ஆதாரம் : கீழுள்ள புகைப்பட பிரதிகள்) குறித்த விடயத்திற்கான தொடர் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்த வரலாற்றை மறுக்கவும் மறைக்கவும் இயலாது என்பதுவே நிதர்சனம்.
மேலும் அன்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரட்நாயக்க ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் ஆகியோரின் கவனத்திற்கு இவ் விடயத்தினை பைசல் காசிம் கொண்டு சென்றதன் காரணமாகவும், தொடர் முயற்சிகளின் பலனாகவும் நிந்தவூரில் நிறுவப்பட்டிருந்த 18 வது விஜயபா ரெஜிமண்ட் D படையணியின் இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
இச்செயற்பாடானது பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் மக்கள் அதிகாரத்தின் மூலமான மற்றுமொரு மகத்துவ சேவையாகும்.
இவ் விடயத் தீர்வில் பெரும் பங்காற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோனுக்கும் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரட்நாயக்கவுக்கும் நிந்தவூர் வாழ் பொதுமக்கள் சார்பில் பைசல் காசிம் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
"சிலர் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றுவதற்காக தூர நோக்கின்றி வழங்கிய சாவிகள் எமதூரின் சாபமாக மாறிப்போகும் என்பது பற்றிய சிந்தனையற்ற அந்நபர்களின் செயல் எமக்கான வரலாற்றுப் படிப்பினை என்பதனையும், சில நாட்களுக்கு முன்னதாகவே இவ் விடயம் தொடர்பாக முன்னெடுப்புகளை மேற்கொண்டவர் எனும் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதன் மூலம் கிடைக்கும் மக்கள் ஆதரவினை விட இராணுவ முகாமினை முற்றாக அகற்றுதலே முக்கியம் என்றுணர்ந்து பொறுமை காத்திருந்தமையினையும் பொதுமக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் சாலச் சிறந்ததாகும்."
No comments:
Post a Comment