நாடளாவிய ரீதியில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.
குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2,888 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள இப்பரீட்சைக்கு 3 இலட்சத்து 37 ஆயிரத்து 596 (337,596) மாணவர்கள் தோற்றுவதற்கு பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பித்துள்ளனர்.
பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வினாப்பத்திரம் ii சுருக்க விடைகள் வழங்கும் 60 வினாக்கள், மு. ப. 9.30 - 10:45 மணி வரையும் (ஒரு மணி நேரம் 15 நிமிடம்) வினாப்பத்திரம் i மூன்று பிரிவுகள் கொண்ட 40 பல் தேர்வு வினாக்கள், 11.15 - 12.15 வரையும் (ஒரு மணி நேரம்) நடத்தப்படுமென பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் உதவிப்பணம் வழங்குவதற்குமாக இடம்பெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு, அரசாங்கப் பாடசாலையொன்றில் அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே தோற்ற முடியும்.
2024 ஜனவரி 31 ஆம் திகதியன்று 11 வயதுக்குக் குறைந்த 10 அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் உடைய மாணவர்களுக்கு மாத்திரமே உதவிப்பணம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment