(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மருந்து இறக்குமதிக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டால் அதனை மறுப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை. என்றாலும் அது இடம்பெறாதமையே நாட்டில் தரம் குறைந்த மருந்து இறக்குமதிக்கு காரணமாகும். அத்துடன் கடந்த காலங்களில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்களில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தரமற்ற மருந்து காரணமாக 20 பேர் மரணித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக சட்ட ரீதியில் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இரண்டாவது நாளாக இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டுக்கு தேவையான மருந்துப் பொருட்களை கொண்டுவரும் சகல அதிகாரமும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கே இருக்கிறது.
தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டால் அதனை மறுப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு சட்ட ரீதியில் எந்த அதிகாரமும் இல்லை. என்றாலும் தற்போது அதுவே இடம்பெறுகிறது.
அதேபோன்று தரம் குறைந்த மருந்து கொண்டுவந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. 131ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனை வழங்க முடியும்.
ஆனால் தரம் குறைந்த மருந்து கொண்டுவந்திருப்பதாக பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வழக்குகூட தொடுக்கவில்லை.
அத்துடன் மயக்க மருந்து, நுண்ணுயிர் கொல்லி மருந்து வழங்கியதன் மூலம் 10 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
அதேபோன்று சிறுநீரகம் தொடர்பான சிகிச்சையில் கண்டி, பேராதனை வைத்தியசாலைகளில் 10 பேர் மரணித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
மேலும் நுவரெலியா மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலைகளில் கண் சத்திர சிகிச்சைகளுக்கு பின்னர் 70 பேரின் கண் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதில் ஒன்று தொடர்பாகவேனும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அறிக்கைகள் பொய்யா என கேட்கிறோம்.
அத்துடன் நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட, அரசாங்கத்திடம் மருந்து பொருட்களை கொண்டுவர பணம் இல்லாமையும் காரணமாகும். இதற்கு அரசாங்கமே பொறுப்பாகும்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வரி குறைப்பு செய்து நாட்டின் வருமானத்தை இல்லாமலாக்கிக் கொண்டது. தற்போது வரி அதிகரிப்பு செய்திருக்கின்றபோதும் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளதால் வரி அறவிட முடியாமல் இருக்கிறது.
மேலும் இலவச சுகாதாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் போயிருக்கிறது. இது மிகவும் பயங்கரமானது.
அரசாங்க வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்து தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப காலத்தில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களும் இறுதி நேரத்தில் அரச வைத்தியசாலைக்கே வருவார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. மக்களின் இந்த மன நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இந்த நிலைமையை சரி செய்வதற்கு புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்கு தேர்தலுக்கு செல்ல வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாட்டால் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இதற்கு தீர்வு காண ஒரே வழி புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதாகும். அதன் மூலமே சுகாதாரத் துறை தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment