பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் கல்வி, சுகாதார சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய - News View

About Us

About Us

Breaking

Thursday, September 7, 2023

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் கல்வி, சுகாதார சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்பு மத்தியில் கல்வித்துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. ஏனைய அமைச்சுக்களை காட்டிலும் சுகாதார அமைச்சுக்கு இரண்டு தடவைகள் மேலதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, சிரேஷ்ட அரசியல்வாதியான கெஹெலிய ரம்புக்வெல்ல நெருக்கடியான சூழலில்தான் சுகாதார அமைச்சினை பொறுப்பேற்றார்.

பொருளாதார பாதிப்பின் பின்னரான காலப்பகுதியில் சுகாதாரத் துறையின் சேவைக் கட்டமைப்பில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கவில்லை. நெருக்கடியான சூழலில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை செயற்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் இலவச சுகாதார சேவையை மேம்படுத்த பொறுப்புடன் செயற்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக குறிப்பிட முடியும். 2016 ஆம் ஆண்டு 629 ஆக காணப்பட்ட அரச வைத்தியசாலைகளின் எண்ணிக்கை தற்போது 648 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1 இலட்சம் பேருக்கு 19 வைத்தியர்கள் சேவையில் இருந்தார்கள். அந்த எண்ணிக்கை 2002 ஆம் ஆண்டு 1 இலட்சத்துக்கு 44 வைத்தியர்களாகவும், 2021 ஆம் ஆண்டு 1 இலட்சத்துக்கு 101 வைத்தியர்கள் என்றும் வைத்திய சேவைகள் உயர்வடைந்துள்ளன.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகளை காட்டிலும் இலங்கையில்தான் இலவச சேவைக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செல்வந்தர்களும், ஏழைகளும் இலவச மருத்துவ சேவையில் சமமாக மதிக்கப்படுகிறார்கள்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 71 இலட்சம் பேர் அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள். அதேபோல் 2020 ஆம் ஆண்டு 63 இலட்சத்துக்கும் அதிகமானோரும், 2022 ஆம் ஆண்டு 53 இலட்சம் பேருக்கு அதிகமானோரும் அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளார்கள்.

ஆகவே தனியார் வைத்திய துறையை காட்டிலும் அரச வைத்திய சேவையை நாட்டு மக்கள் முழுமையாக நாடுகிறார்கள். பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலும் கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் அதிக நிதி சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் அவசர தேவை என்ற அடிப்படையில் ஏனைய அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தில் இருந்து 5 சதவீதம் அறவிடப்பட்டு அந்த நிதி சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சுகாதார சேவை குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment