(எம்.ஆர்.எம்.இராஜதுரை ஹஷான்)
அசாத் மௌலானா, நிஷாந்த டி சில்வா ஆகியோர் டொலருக்காக நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள். புகழிட கோரிக்கைக்காக சனல் 4 க்கு இவர்கள் குறிப்பிடும் பொய்யை இந்த நாட்டு மக்கள் நம்புவார்களாயின் அவர்களுக்கு கடவுள் துணை புரிய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தற்போது பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் 2018.02.10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத் தாக்குதலின் பின்னர் கத்தோலிக்க, முஸ்லிம் சமூகத்தினர் கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை இதனை எவரும் கதைப்பதில்லை.
அசாத் மௌலானா, சானியா பீரிஸ், நிஷாந்த டி சில்வா, லசந்த விக்கிரமதுங்களின் சகோதரர் லால் விக்கிரமதுங்க ஆகியோர் டொலர் பேராசையால் சர்வதேச மட்டத்தில் இருந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள். இறுதிக்கட்ட யுத்தத்தில் நந்திக்கடலில் அகப்பட்ட பிரபாகரனை விடுவிக்குமாறு சர்வதேசம் வலியுறுத்தியது. ஆனால் ராஜபக்ஷர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.
ராஜபக்ஷர்கள் பிரபாகரனை விடுவித்திருந்தால் சனல் 4 இன்று ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்காது. ராஜபக்ஷர்கள் மீது வைராக்கியத்துடன் செயற்படுபவர்கள் டொலருக்கு அடிமையாகி செயற்படுகிறார். சனல் 4 காணொளிக்கு ஒரு சில ஊடகங்கள் முன்னுரிமை வழங்குகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பணத்தை மோசடி செய்து வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானா புகழிட கோரிக்கைக்காக கூறும் பொய்யை இந்த நாட்டு மக்கள் நம்புவார்களாயின் அனைவருக்கு கடவுள் துணை புரிய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment