(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மேலே உள்ள இறைவன் தற்போது தண்டனை வழங்க ஆரம்பித்திருக்கிறார். அதில் ஒருவர்தான் கோத்தாபய ராஜபக்ஷ். அவர் நாட்டையும் விட்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதேபோன்று வீதியில் பிச்சை எடுத்து பணம் சேர்க்க முற்படுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தவறு செய்த அனைவருக்கும் இறைவனின் தண்டனை கிடைத்தே ஆகும். ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் துடைத்தெறிந்துவிட்டு சிறந்த அரசாங்கம் ஒன்றை இறைவன் ஏற்படுத்துவான் என குமாரவெல்கம தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இரண்டாவது நாளாக இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தில் இடம்பெறும் தவறுகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். யாராவது தவறு செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதன பின்னர் அந்த தவறை மற்றவர்கள் செய்யமாட்டார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறுவதில்லை.
ஆனால் யாராவது அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்த குழு அமைப்பதே இடம்பெறுகிறது. அவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களால் இதுவரை எதுவும் இடம்பெற்றதில்லை.
ஈஸ்டர் தாக்குல் தொடர்பாகவும் குழு அமைத்தார்கள். ஒன்றும் இடம்பெறவில்லை. அண்மையில் அமைச்சர் ஒருவர் தூதரகம் ஒன்றில் இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே ரணில் விக்ரமசிங்க குறித்த அமைச்சரை அந்த பதவியில் இருந்து நீக்கி அது தொடர்பில் விசாரணை குழு ஒன்றை அமைத்தார். ஆனால் இறுதியில் அவர் குற்றம் அற்றவர் என தெரிவித்து, மீண்டும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கினார்.
ஆனால் ஜனாதிபதி குறித்த உறுப்பினருக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் நடவடிக்கை எடுத்திருந்தால், இதனை முன்மாதிரியாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏனைய அமைச்சர்கள் இவ்வாறான தவறுகளில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை செய்ய தவறினார். பாராளுமன்றத்தில் இருக்கும் நாங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் நாங்கள் அனைவரும் திருடர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதனால் ஜனாதிபதி அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் இந்த மோசடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி, தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டு இந்த மோசடிகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அதனால் இந்த விடயங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும்.
மேலும் சனல் 4 தெரிவிக்கும் விடயங்களை நான் 50 வீதமேனும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலவேளை, மஹிந்த ராஜபக்ஷ் யுத்தத்தை வெற்றி கொள்ள நடவடிக்கை எடுத்ததால் அவருக்கு எதிராக செயற்படுவதற்காக இது இடம்பெறலாம். சிலவேளைகளில் அதில் தெரிவிக்கப்படும் செய்திகளில் சில உண்மைகளும் இருக்கலாம். என்றாலும் என்ன நடந்தது என்பதை சனல் 4 தெரிவிக்க வேண்டியதில்லை.
பாராளுமன்றத்தில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் தெரியும். அன்றிருந்த அரச தலைவர் வெளிநாட்டில் இருந்தபோது உடனடியாக நாட்டுக்கு திரும்பாமல் அங்கு சவாரி செய்துகொண்டிருந்தார். நாடு தொடர்பில் எந்த உணர்வும் அவருக்கு இருக்கவில்லை.
அதனால் இந்த தாக்குதலை யார் செய்தார் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும். நானும் இந்த சபையில் அது தொடர்பில் தெரிவித்திருக்கிறேன்.ஆனால் மேலே உள்ள இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இறைவன் தற்போது தண்டனை வழங்க ஆரம்பித்திருக்கிறார்.
அதில் ஒருவர்தான் கோத்தாபய ராஜபக்ஷ். அவர் நாட்டையும் விட்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதேபோன்று வீதியில் பிச்சை எடுத்து பணம் சேர்க்க முற்படுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தவறு செய்த அனைவருக்கும் இறைவனின் தண்டனை கிடைத்தே ஆகும்.
ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் துடைத்தெறிந்துவிட்டு சிந்த அரசாங்கம் ஒன்றை இறைவன் ஏற்படுத்துவான் என்றார்.
No comments:
Post a Comment