(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பது பயனற்றது. சர்வதேச விசாரணை அத்தியாவசியமானது. புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் குடும்ப பாதுகாவலன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தற்போது பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை அறிவோம். ஆகவே சனல் 4 குறிப்பிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது.
ஆகவே சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சனல் 4 காணொளியில் சுரேஷ் சலே தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது புலனாய்வுப் பிரிவில் இருந்துகொண்டு சலே, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வுப் பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.
புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்களின் பாதுகாவலன். அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் தூய்மைப்படுத்துபவர். ஆகவே சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment