நாட்டில் கடந்த காலங்களில் பெருமளவிலான மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் போர்வையில், மதுபான உரிம பத்திரங்களை நண்பர்களுக்கு அரசாங்கம் விற்பனை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதென, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (07) பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது தொடர்பில், கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
‘‘சில பகுதிகளில் புதிதாக மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். விகாரைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சிறார்களும் மதுவுக்கு பலியாகும் அபாயம் எழுந்துள்ளது.
மக்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அதிகமாக உள்ளாவது, நல்லொழுக்கமுள்ள சமுதாயத்திற்கு தடையாக உள்ளது. இவ்வாறான நிலை உருவாகாமல் அவதானிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அரசியல் நண்பர்களுக்கு பியர் உரிமம் அல்லது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதால், பல பகுதிகளில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாத் தொழில் செயற்படாத பிரதேசங்களிலும் இந்த பியர் உரிம பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத் தேர்தலுக்காகப் பணம் தேடுவதற்கு அரசாங்கம் இவ்வாறு உரிமப்பத்திரம் வழங்குவதாகவே கருத முடிகிறது.
இது தொடர்பாக தொகைக் கணக்கெடுப்பை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தவுள்ளது. அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இது குறித்த தகவலை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment