போலி ஸ்டிக்கர்களை உபயோகித்து மதுபானம் விற்பனை செய்த நிறுவனத்திற்கு 5 கோடியே 20 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இத்தண்டப் பணத்தை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்துவதற்கு அந்நிறுவனம் தவறுமானால், அதன் அனுமதிப்பத்திரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 ன் கீழ், எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 43,776 மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான போத்தல்களை இனங்காண்பதற்கு இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதுபான விற்பனை நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை கலால் வரி நியதி 902 ன் படியே இரத்து செய்ய முடியும். எனினும், இதன் மூலமான விதிமுறைகள் காலத்திற்கு பொருத்தமானதல்ல. அதனை காலத்திற்கு பொருத்தமானதாக மாற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
நாடளாவிய ரீதியில் 4570 மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 25 வகைகளின் கீழ் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் ஒருபோதும் மதுபான விற்பனையை ஊக்குவிப்பதில்லை. அதனால்தான், நூற்றுக்கு 75 வீத வரி அறவிடப்படுகிறது.
அதேவேளை, மதுபான அனுமதிப்பத்திரங்களை சுற்றுலாத்துறை வலயங்களுக்கு மட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment