முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய், மனிதப் புதைகுழி அகழ்வில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றபோது அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும் பாலநாதன் சதீஸ் ஆகியோர் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் பொலிசாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு கண்டனத்திற்குரியதென முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் என நம்பப்படும் இருவருடைய மனித எச்சங்கள் முற்றுமுழுதா அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனித எச்சங்களில் துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட சில ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் இலக்கங்கள் இருந்ததையும் அவதானிக்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மூன்றாம் நாள் அகழ்லுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது, இங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களைப் பொலிசார் தள்ளி அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையையும் அவதானிக்கப்பட்டிருந்து.
ஏற்கனவே இந்த அகழ்வுப் பணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும்போது, ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க அகழ்வாய்வுப் பணிகளை செய்தி அறிக்கையிட வந்த ஊடகவியலாளர்கள் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டமை கண்டனத்திற்குரிய விடயமாகும்.
அத்தோடு இந்த மனிதப் புதைகுழி அகழ்வுகள் இலங்கையில் ஏற்கனவே 33 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது. அதேவேளை இவ்வாறு ஏற்கனவே இடம்பெற்ற மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்பதையும் அறியமுடிகின்றது.
இந்நிலையில் இந்த அகழ்வுப் பணிகளில் பெண்களுடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு மீட்கப்படுகின்ற மனித எச்சங்களில் துப்பாக்கி ரவைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், இப்பகுதி மக்களை சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இப்படி நிலமைகள் இருக்கும்போதே இந்த விடயங்களை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கு இங்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
பின்னர் நீதிபதியவர்களின் அனுமதியுடன் ஊடகவியலாளர்கள் அங்கு தமது கடமையில் ஈடுபடக்கூடியவாறிருந்தது. அந்த வகையில் நீதிபதியையும், நீதிமன்றையும் நாம் முழமையாக நம்புகின்றோம்.
இந்த அகழ்வுப் பணி தொடர்பில் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment