காத்தான்குடி பிரதேசத்தில் சமகாலத்தில் இடம்பெற்று வருகின்ற அதிகமான திருமண வைபவங்களில் வீண் செலவுகளுடன் கூடிய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் மற்றும் வெறுக்கத்தக்க சில அனாச்சாரங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதை பரவலாக காணக் கூடியதாகவுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துடன் இணைந்து கடந்த காலங்களில் ஊர் தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திருமண சீர்திருத்த பிரகடனதத்தினை காலத்திற்கேற்ற வகையில் மீள் வாசிப்பு செய்து அதனை மீள நடைமுறைப்படுத்தும் நோக்குடனான ஆலோசனை கலந்துரையாடல் அமர்வொன்று 2023.09.06 ஆம் திகதி புதன்கிழமை இரவு 08:30 மணியளவில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மண்டபத்தில் நடைபெற்றது.
சபையில் வீற்றிருந்த அதிகமானவர்களினால் குறித்த சீர்திருத்தம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய காலத்திற்கேற்ற காத்திரமான மாற்றங்கள் தொடர்பான முன்வைப்புக்களும் கருத்துக்களும் பகிரப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேற்படி, கலந்துரையாடலில் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளடங்களான நிருவாக உறுப்பினர்கள், சம்மேளன தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளடங்கலான பதவி தாங்குனர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இம்மாத இறுதிப் பகுதியில் ஊர் தழுவிய ரீதியிலாக திருமண சீர்திருத்த தீர்மானங்கள் உள்ளடங்கிய பிரகடனம் வெளியிடுவதாக தீர்மானிக்கப்பட்டு அதனை ஒழுங்கு படுத்துவதற்காக ஜம்இய்யா சார்பாக 10 உலமாக்களும் சம்மேளனம் சார்பாக 10 பேரும் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது.
எம்.எஸ்.எம்.நூறுதீன்
No comments:
Post a Comment