எதிர்த்தரப்பினரது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது : சர்வதேச விசாரணைகளுக்கு தயார் என்கிறார் பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 21, 2023

எதிர்த்தரப்பினரது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது : சர்வதேச விசாரணைகளுக்கு தயார் என்கிறார் பிள்ளையான்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்தினால் அதனையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். குண்டுத் தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்த்தரப்பினரது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

52 நாள் அரசியல் நெருக்கடியை நீதிமன்றம் தோற்கடித்ததை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கான 'பிளேன் பி' சிறைக் கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது. பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பெரேரா எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை குறிப்பிட்டார்.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டால் அதற்கும் தயாராக உள்ளேன். எப்போது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வீர்கள் என்று குறிப்பிடுவீர்கள். குண்டுத் தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்க்கட்சிகளின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நிரோஷன் பெரேரா, சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு இந்த குண்டுத் தாக்குல் சிறுப்பிள்ளைத்தனமானதாக இருக்கலாம். ஆனால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இச்சம்பவம் சிறுப்பிள்ளைத்தனமானதல்ல, இவரின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பிள்ளையானுக்கு எதிராக வெகுவிரைவில் முறையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்.

இதன்போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதலை நடத்தியவர், ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்தவர், திரிபோலி குழுவுக்கு தலைமை தாங்குபவர் எமக்கு இடையூறு விளைவிக்கிறார். இவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்த விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிள்ளையான் சிறையில் இருந்தார். அக்காலப்பகுதியில் சிறைக்கு சென்ற சஹ்ரான் தரப்பினருக்கும், பிள்ளையானுக்கும் இடையில் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. 52 நாள் அரசியல் நெருக்கடி நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டவுடன், பிளேன் பி சிறைக் கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது. ஆகவே பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என்றார்.

No comments:

Post a Comment