போதைப் பொருளை ஒழிப்பதற்கான நிலையத்தை அமைப்பது குறித்த தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வு : இரசாயண பகுப்பாய்வு அறிக்கை காலதாமதம் அடைவது குறித்தும் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

போதைப் பொருளை ஒழிப்பதற்கான நிலையத்தை அமைப்பது குறித்த தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வு : இரசாயண பகுப்பாய்வு அறிக்கை காலதாமதம் அடைவது குறித்தும் கேள்வி

போதைப் பொருளை ஒழிப்பதற்கான நிலையத்தை அமைப்பதன் தற்போதைய நிலைமை குறித்து நாட்டில் வேகமாகப் பரவி வரும் போதைப் பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் ஆராயப்பட்டது.

குறித்த குழு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் பாராளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்திலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

குழுவின் அமர்வுக்கு சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, மீன்பிடித்துறை அமைச்சு, இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை சுங்கம், தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு, தபால் திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியன அழைக்கப்பட்டிருந்தன.

போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது.

போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் தலைவர் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குழுவில் கருத்துத் தெரிவிக்கையில், போதைப் பொருளை அழிப்பதற்கான நிலையமொன்று கற்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்படுவதாகவும், இதற்கான நீர், மின்சாரம் மற்றும் பாதைக் கட்டமைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தக் குழு தலையிடுமாயின் இந்த வருட இறுதிக்குள் குறித்த நிலையத்தை அமைக்க முடியும் என்றார்.

இந்தக் கோரிக்கைக்கு அமைய இவ்விடயத்தில் உரிய தலையீட்டை மேற்கொள்வதாக குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

அத்துடன், இரசாயண பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகள் காலதாமதம் அடைவது தொடர்பில் இங்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

பகுப்பாய்வு அறிக்கையை வழங்குவதற்கு முன்னர் 9 மாத காலங்கள் சென்றதாகவும், தற்பொழுது 3 மாதங்கள் மாத்திரமே செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்குக் காணப்படும் பற்றாக்குறை இதற்குக் காரணம் என்றும், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், ஈசி காஷ் (ez cash) ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி கொடுக்கள் வாங்கல் மூலம் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாகவும், இது தொடர்பில் தொலைத் தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் பணியில் சுதேச மருத்துவ அமைச்சின் ஆரதவைப் பெறுமாறு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், தபால் மூலம் போதைப் பொருள் விநியோகம் இடம்பெறுவதைத் தடுப்பது, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப் பொருள் பரவலைக் கட்டுப்படுத்தல், கடல் வழியாக போதைப் பொருள் நாட்டுக்குள் கொண்டுவருவதைத் தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்தக் குழுவில் இணைந்துகொண்டதுடன், போதைப் பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது தேசிய பாதுகாப்போடு நேரடியாக தொடர்புடையது எனவும், இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான சட்டத்தரணி சிசிர ஜயகொடி, வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரண, ஜயந்த சமரவீர, வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி, மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய, உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment