(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சுகாதார அமைச்சராக மாவட்ட, பிரதேச வைத்தியசாலைகளின் வளங்கள், ஆளணி பற்றாக்குறை தொடர்பாகவும் மற்றும் அதன் சேவைகள் தொடர்பிலும் அறியத் தவறியவராக இந்த அமைச்சர் இருக்கிறார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) நடைபெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டதாவது, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வைத்தியசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.
அங்கு சென்று நிலைமைகளை கண்டறிய வேண்டும் என்று சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
சுகாதார அமைச்சராக மாவட்ட, பிரதேச வைத்தியசாலைகளின் வளங்கள், ஆளணி பற்றாக்குறை தொடர்பாகவும் மற்றும் அதன் சேவைகள் தொடர்பிலும் அறியத் தவறியவராக இந்த அமைச்சர் இருக்கிறார்.
இதேவேளை கடந்த 2ஆம் திகதி யாழ். வைத்தியசாலையில் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் பணியாளர் செய்த தவறினால் 8 வயது சிறுமியொருவர் தனது கையை இழந்துள்ளார்.
தவறான மருந்துகளால் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையை சத்திர சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். இதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று கூறிவிட முடியாது. சிறுமியின் கை அகற்றப்பட்டமை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
இந்த விடயம் தொடர்பாக நீங்கள் அறிந்துள்ளீர்களா? இது தொடர்பான விசாரணை எந்த வகையில் அமையும் என்றும் கூற வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. அது தொடர்பில் அறிக்கையொன்று கையளிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment