(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் அரசாங்க நிதிக் குழுவில் கலந்துரையாடாமல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருந்தது. என்றாலும், குறித்த சட்டமூலம் அரசாங்க நிதிக் குழுவில் ஆராயப்படாமல் சபையில் விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கையில், உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக நிதிக் குழுவில் இன்னும் கலந்துரையாடவில்லை. குறித்த சட்டமூலம் தொடர்பாக எந்த பகுப்பாய்வையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அப்படியானால் அரசாங்க நிதிக் குழுவை ஓரங்கட்டி இதனை மேற்கொள்ளவா முயற்சிக்கிறது?
அத்துடன் இந்த சட்டமூலம் தொடர்பான தகவல்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் கேட்டோம். நேற்று வரை எமக்கு கிடைக்கவில்லை. தரவுகள் எதுவும் இல்லாமல் சட்டமூலத்தை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என கேட்கிறோம் என்றார்.
அதனை தொடர்ந்து வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில், உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை உடனடியாக நிறைவேற்ற தவறினால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால், இந்த சட்டத்தை நிறைவேற்றுவதால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதி சிந்திப்பதில்லை. அதனால் அரசாங்க நிதிக் குழுவில் ஆராயாமல் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றார்.
அதனைத் தாெடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், எந்த சட்டமூலமும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்ந்து அதன் அனுமதி கிடைத்த பின்னரே பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நாங்கள் இந்த சபையில் தீர்மானம் மேற்கொண்டோம். அதனால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment