(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள போதும் ஒரு தரப்பினர் அதற்கு சாதகமான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. குண்டுத் தாக்குல் சம்பவத்தில் ஆளும், எதிர்த்தரப்பினர் முரண்பட்டுக் கொண்டால் ஒருபோதும் உண்மையை கண்டுப்பிடிக்க முடியாது. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் முரண்பட்டுக் கொண்டால் ஒருபோதும் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாது .
குண்டுத் தாக்குதலினால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் நான் ஒரு தரப்பினரால் இனவாதியாகவும், இரத்தத்தை காண்பதற்கு ஆசை கொண்டுள்ள நபர் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.
நல்லாட்சி அரசாங்கத்தின்போது நீதியமைச்சர் பதவியில் இருந்துகொண்டு அடிப்படைவாதம் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். அதன் பின்னர் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். எமது அரசாங்கத்தின் உறுப்பினர்களே என்னை விமர்சித்தார்கள். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே சிறந்த முறையில் செயற்பட்டார்.
நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் மாத்திரமே நடுநிலையுடன் கருத்து தெரிவித்தார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை. என்னை விமர்சிப்பதை மாத்திரமே இலக்காகக் கொண்டு அப்போதைய அரசாங்கம் செயற்பட்டது. இறுதியில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஆனால் அதற்கு உரிய தரப்பினர் சாதகமான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
ஆகவே குண்டுத் தாக்குதல் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பிரச்சினையில்லை. அன்று தடுக்க கூடிய அழிவை தடுக்காத காரணத்தால்தான் பலர் உயிரிழந்தார்கள். ஆகவே இவ்விடயத்தில் பாராளுமன்றம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment