இன்று (12) காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் கூரையின் மீது ஏறி பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரபே புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் டபிள்யூ.டி.ஐ. பெரேரா எனும் 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவர் கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பம் தொடர்பான பாடநெறியை பயின்று வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நேற்று நள்ளிரவு (12) முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினால், இன்று காலை முதல் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அதிகளவான புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டதோடு, ஏனைய புகையிரதங்கள் தாமதமாகவே பயணித்தன.
இந்நிலையில், அதிக சனநெரிசல் காரணமாக குறித்த இளைஞன் புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்த நிலையில் கீழே வீழ்ந்து இறந்துள்ளார். அவர் ஏதோ ஒன்றில் மோதி இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment