சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாடு கூட்டுக : ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 12, 2023

சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாடு கூட்டுக : ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்

பெருந்தோட்டங்களில் இடம்பெறும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பையும் அழைத்து அவசர மாநாடு ஒன்றை கூட்டுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். 

மனோ கணேசன் எம்பி தன் கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, இரத்தினபுரி மாவட்ட காவத்தை பெருந்தோட்ட நிறுவன வெள்ளந்துரை தோட்டம், இதற்கு முன் மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லை. இவை தொடர்கின்றன. 

இரத்தினபுரி, மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்ன, “பெருந்தோட்டங்களுக்கு உள்ளே செயற்பட முடியவில்லை. தயவுசெய்து அரசியல் உயர் மட்டத்தில் பேசி நடைமுறை அதிகாரத்தை பெற்றுத் தாருங்கள்” என என்னிடம் கோரினார். பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண “இந்த கம்பனிகாரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று ஜனாதிபதியிடம் முறையிடும்படி என்னிடம் கூறினார். 

இவை தொடர்பில் உங்களிடம் தொலைபேசியில் நேற்றிரவு உரையாடியபோது, எழுத்து மூலமான ஒரு முன்மொழிவை தரும்படி கேட்டீர்கள். அதன்படி அனைத்து தரப்பினரையும் அழைத்து அவசர மாநாடு நடத்தி, இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு நிரந்தரமான தீர்வை காணும்படி உங்கள் மூலம் கோருகிறேன்.

ஜனாதிபதி, பொது நிர்வாக அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, பொலிஸ் துறை அமைச்சர் டிரான் அலஸ், அரசு - எதிரணி தரப்புகளை சார்ந்த ஒன்பது மலையக எம்பிக்கள், கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரேலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை, குருநாகலை ஆகிய 12 மாவட்டங்களின்  செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர், 22 பெருந்தோட்ட நிறுவன மேலாளர்கள், உள் குத்தகை பெற்றுள்ள தோட்ட நிறுவன மேலாளர்கள், 3 அரச பெருந்தோட்ட அதிகாரிகள், மலையக சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து அவசர மாநாட்டை நடத்தி நிரந்தர தீர்வை காணுங்கள்.

இரத்தம், வியர்வை சிந்த இந்நாட்டை வளப்படுத்திய பெருந்தோட்ட மக்கள், இன்று 200 வருடங்களை இந்நாட்டில் நிறைவு செய்கிறார்கள். இந்நாட்டுக்கு அவர்களின் அவர்களது  குறைத்து மதிப்பிட முடியாதது. மலையக தமிழர்கள் மத்தியில் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இம்மக்கள், எனது தொகுதி கொழும்பு அவிசாவளை முதல் சுமார் பன்னிரெண்டு மாவட்டங்களில் படும்பாடு மிக மோசமானதாகும். 

நீதிமன்ற ஆணை இல்லாமல் அவர்களது வீடுகள் உடைக்கப்படுகின்றன. ஆங்காங்கே நடைபெற்ற சம்பவங்கள் இப்போது பரவலாக நடைபெறுகின்றன. பல சம்பவங்கள் பகிரங்கமாவதில்லை. ஒருசிலவே வெளியில் தெரிய வருகின்றன.

தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வசிப்பிட, வாழ்வாதர காணி உரிமை தொடர்பில் நாம் கூடி பேசி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அவை மாவட்ட செயலாளர்களுக்கும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும். தயவு செய்து அவசர மாநாட்டை உங்கள் தலைமையில் கூட்டுங்கள்.         

No comments:

Post a Comment