(எம்.வை.எம்.சியாம்)
சுற்றுச்சூழல் அழகாக உள்ளது என்பதற்காக பொலிஸ் நிலையம் அழகு என்று கூற முடியாது. எமது பொலிஸ் சேவைகளின் ஊடாகவே அது அழகாகிறது. எனவே நாம் மக்களுக்கு செய்யும் சேவைகளை சிறப்பாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தை நேற்றுமுன்தினம் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், நாம் பொலிஸாரிடமிருந்து நேர்மையான மற்றும் தரமான சேவையை எதிர்பார்க்கிறோம். பொலிஸார் மீது கொண்டிருந்த அதிருப்தி நிலை தற்போது இல்லாமல் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
நான் அமைச்சராக பதவியேற்ற பிறகு பொலிஸாருக்கு செய்யக்கூடிய அனைத்தையும் செய்துள்ளேன். நாடளாவிய ரீதியில் 500 ஜீப் வண்டிகள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்கு பதிலாக நேர்மையான சேவையை பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
மேலும் சுற்றுச்சூழல் அழகாக உள்ளது என்பதற்காக பொலிஸ் நிலையம் அழகு என்று கூற முடியாது. எமது பொலிஸ் சேவைகளின் ஊடாகவே அது அழகாகிறது. பாராளுமன்றத்தில் கூட பொலிஸாரை திட்டுகிற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் பொலிஸ் நிலையங்களுக்கே வருகின்றனர்.
நாம் மக்களுக்கு செய்யும் சேவைகளை சிறப்பாக செய்ய வேண்டும். மேலும் இந்த பிரதேசத்தில் உள்ள சாராயம் போதைப் பொருள் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அப்போதே இந்த பிரதேசம் அழகாகும் என்றார்.
No comments:
Post a Comment