(ஆர்.ராம்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக சனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை முழுமையாக நிராகரிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஊடகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள காணொளி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ சோசா ஆகியோர் தலைமையிலான மூவரங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில், கருத்து வெளியிடும்போதே அக்கட்சியின் முக்கியஸ்தரான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கு அடுத்தபடியாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
இவற்றை விடவும், பொலிஸார், படையினர் உள்ளிட்டவர்களும் சில விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆனால், இதுவரையில் உண்மைகள் முழுமையாக கண்டறியப்படவில்லை.
குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக்கூறப்படவில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் ஒரு தடவை விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த விசாரணைக்குழுவினை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். குறித்த குழுவானது காலத்தினை இழுத்தடிக்கச் செய்வதற்கான ஜனாதிபதியின் நோக்கத்தினையே நடைமுறைப்படுத்தும் என்றே கருதுகின்றோம். ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதே பொருத்தமானதாகும்.
மேலும், விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு முன்னதாக தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அதிகாரிகளான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன, அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அவ்வாறான செயற்பாடுகள் ஊடாகவே ஜனாதிபதியும், அரசாங்கமும் உண்மைகளை கண்டறிவதற்கான இதயசுத்தியுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment