(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. யாருக்காக எதற்காக உண்மைகளை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
தென்னை உற்ப்பத்தி செய்யும் விவசாயிகள் குழுவுடனான சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் உண்மையில் அதன் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை அரசாங்கம் கண்டு பிடிக்க வேண்டும். இந்த உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு அரசாங்கம் ஏன் முக்கியத்துவம் வழங்காமல் இருக்கிறது.
அண்மையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் எந்தளவில் உண்மையானவை? இதனை அறிந்து கொள்வதற்கான தேவை அரசாங்கத்துக்கு இல்லையா? ஒரு சிலரை ஆட்சியில் அமர்த்துவதற்காகவா உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன? உண்மைகளை மறைப்பதற்கு ஏன் முயற்சிக்கப்படுகிறது. உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு ஏன் அரசாங்கம் பின்வாங்குகிறது?
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பொறுப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான 134 மக்கள் பிரதிநிதிகளே தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்தனர்.
உண்மைகள் தொடர்பில் கண்டறிவதற்கான தெளிவான ஆணை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைக் கொண்டு அரசியல் செய்வதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். ஆனால் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஆனால் உண்மைகளை மறைப்பதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாகவே எமக்குத் தோன்றுகிறது. யாரைப் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது? யாருக்காக உண்மைகள் மறைக்கப்படுகின்றன? உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று நாம் அரசாங்கத்திடம் சவால் விடுக்கின்றோம். உண்மைகள் வெளிப்படுத்தப்படும் வரை நாம் அதற்காக முன்னின்று செயற்படுவோம் என்றார்.
No comments:
Post a Comment