அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கும் 18 வீடமைப்புத் திட்டங்களின் 623 வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்களை விரைவாக வழங்குங்கள் : பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 5, 2023

அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கும் 18 வீடமைப்புத் திட்டங்களின் 623 வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்களை விரைவாக வழங்குங்கள் : பிரசன்ன ரணதுங்க

அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 18 வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு சொந்தமான காணியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்தினால் காணி உறுதிப்பத்திரங்களுக்கு அதிக பெறுமதி வழங்கப்படுவதனால் மக்கள் அதனை பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டபிள்யூ. டி.வீரசிங்க தெரிவித்தார்.

எனவே குறித்த காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுவீகரித்து அதற்கான உரிமைப்பத்திரங்களை வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அந்த காணிகளின் உரிமையை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவதற்கு அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தற்போது பிரதேச செயலகங்கள் வசம் உள்ள காணிகளின் உரிமை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் காணி உறுதிப்பத்திரங்களை உடனடியாக வழங்குவதில் பிரச்சினையில்லை என்றார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற “உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதி மற்றும் வீட்டுக் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் 51 பயனாளிகளுக்கு 18.25 மில்லியன் ரூபா பெறுமதியான வீடமைப்புக் கடனுதவியும், அம்பாறை மாவட்டத்தில் 15 வீடமைப்புத் திட்டங்களை உள்ளடக்கிய 110 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட மக்களுக்கு 23 வருடங்களின் பின்னர் வீட்டு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

1999 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காணிப் பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் இங்கு வழங்கப்பட்டன.

அனைவருக்கும் வீட்டு உரிமைப்பத்திரங்கள் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

அதன் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபை, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அவரது அமைச்சின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக உரிமைப்பத்திரங்களை வழங்க ஆரம்பித்துள்ளன.

வீட்டு உரிமைப்பத்திரங்களை வழங்கும்போது மக்களை பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பிரதேச செயலகங்களுக்குச் சொந்தமான காணிகளை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு மாற்றியதன் பின்னர் ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட இலவச ஒதுக்கீடு படிவமாக மக்களுக்கு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜனக தெரிவித்தார்.

பொது வசதிகளை மேம்படுத்துவதற்கு மதிப்பிடப்பட்ட பெறுமதிக்கு பதிலாக மக்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ. டி.வீரசிங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா, எஸ்.எம்.எஸ்.முஷர்ரப், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment