(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
களனிவெளி ரயில் பாதையை நவீனமயப்படுத்தி காலத்துக்கு பொருத்தமான வகையில் மின்சார ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு உரிய சூழலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அசோக அபேசிங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், களனிவெளி ரயில் பாதையை நவீன மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் மருதானையிலிருந்து பாதுக்கை வரையிலான பகுதி மின்சார மயப்படுத்தப்பட்ட உள்ளது.
நவீன மயமான தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் புதிய சமிக்ஞை தொகுதிகள் ஆகியவற்றுடன் மாளிகாவத்தையில் இருந்து மாரப்பன வரையான பகுதி மேம்பாலத்துடனானதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்கான மதிப்பாய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பகுதியில் பூகோள அபிவிருத்தி தொடர்பான சூழல் அதிகார சபையின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த திட்டத்தின் கீழ் பாதுக்கையில் இருந்து அவிசாவளை வரை ரயில் பாதை மின்சாரமயப்படுத்தி தனி பாதையாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய பஸ் தரிப்பு நிலையங்களுடன் ஒரே தடவையில் 100 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
காரியாலய நேரங்களில் 12 பெட்டிகளுடன் ஏழு நிமிடங்களுக்கு ஒரு தடவை ரயில் சேவையை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு இணங்க அந்த பகுதியில் அனுமதியற்ற வீடுகளை அமைத்துள்ள 670 பேருக்கு புதிய வீடுகளையும் மேலும் கட்டிடங்களைக் கொண்ட 38 பேருக்கு நட்டஈட்டை வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment