வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவை எமக்கிடையாது : எமது கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 29, 2023

வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவை எமக்கிடையாது : எமது கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பயாகலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளதால் எமது கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி அடிப்படையற்றது. வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. எமது கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை களமிறக்குவோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானங்களை அறிவிப்போம். கட்சியை பலப்படுத்தும் வகையில் பல தீர்மானங்களை தற்போது முன்னெடுத்துள்ளோம். மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு உள்ள செல்வாக்கை ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment