(இராஜதுரை ஹஷான்)
மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு ஆகியவற்றுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டிய தேவையில்லை. ஆகவே சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உறுதியாக தீர்மானித்துள்ளோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமற்றது.
தொழில்நுட்பம் மற்றும் பொது காரணிகளை அடிப்படையாக கொள்ளாமல் முறையற்ற வகையில் நம்பிக்கையில்லா பிரேரணையில் குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியின்போது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பிரதான பிரச்சினையாக காணப்பட்டது. கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்து ஆராய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் விசேட குழு ஒன்று அப்போது நியமிக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
எரிவாயு வெடிப்பு சம்பவத்தை போன்றே தற்போது மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.
சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரரணைக்கு எதிராகவே வாக்களிப்போம்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையை பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம் என்றார்.
மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினர் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளனர்.
எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment