இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்த அழைப்பை தவறவிட்ட போராட்டக்காரர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 29, 2023

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்த அழைப்பை தவறவிட்ட போராட்டக்காரர்கள்

(நா.தனுஜா)

உள்ளகக் கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனான சந்திப்புக்கு ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அச்சந்தர்ப்பம் போராட்டக்காரர்களால் தவறவிடப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை செயற்திட்டத்தை (உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு) நடைமுறைப்படுத்துவதன் விளைவாக ஊழியர் சேமலாப நிதியத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்துக்கு எதிராக திங்கட்கிழமை (28) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக இலங்கை மத்திய வங்கி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பொன்றுக்கு கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊடாகக் கோரிக்கை விடுத்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அக்கோரிக்கையைப் பரிசீலனை செய்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவரடங்கிய குழுவினரை நேற்று (28) பி.ப 2.30 மணிக்கு சந்திப்பதற்குத் தயார் என்று கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊடாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அறிவித்ததாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'இருப்பினும் சந்திப்புப் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான அவர்களது இயலாமை பற்றி எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊடாக மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை, அச்செயற்திட்ட அமுலாக்கத்தில் உறுப்பினர் பங்களிப்புக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள முறைமை, இச்செயற்திட்டத்தின் கீழ் ஊழயர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டதைப் போன்று குறைந்தபட்ச முதலீட்டு ஆதாயம் வழங்கப்படவுள்ள முறைமை என்பன பற்றிய கரிசனைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்குப் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது' என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment