(எம்.வை.எம்.சியாம்)
தரமற்றவை எனக்கூறி சுங்கத் துறையினரால் அழிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு பகிர்ந்தளித்திருக்கலாம். வறுமையில் வாடும் மக்கள் வாழும் இந்த நாட்டில் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை மேற்கொள்ளாமல் கிடைக்கப் பெறும் வளங்களைப் பாதுகாக்குமாறு கூறும் புத்தரின் போதனைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டுமென ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பல கோடி மதிப்புள்ள காலணிகள், புத்தக பைகள், தொப்பிகள் போன்ற பல உபகரணங்கள் தரமற்றவை எனக்கூறி சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் தரமற்றவை எனக்கூறி அதனை அழிப்பதனை ஏற்றுக் கொள்ளலாம். இருப்பினும் பாடசாலை உபகரணங்கள் தரமற்றவை என்பதால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது பாடப் புத்தகங்களை கொண்டு செல்வதற்கு புத்தகப் பை இன்றி பொலித்தீன் பைகளில் எடுத்துச் செல்லும் எத்தனை மாணவர்கள் நாட்டில் இருக்கிறார்கள்?
சப்பாத்து இல்லாது செருப்பினை அணிந்து செல்லும் மாணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அழிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எத்தனை மாணவர்களுக்கு பகிர்ந்தளித்திருக்க முடியும்.
சுங்கத்தினர் கூறுவதை பார்க்கும்போது இன்றும் நம் நாட்டில் பயன்படுத்தப்படும் சில நிறுவனங்கள் தயாரிக்கும் பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் தரமானதாக உள்ளதா?
தரமற்ற உபகரணங்களை பயன்படுத்துவதால் உடல் ரீதியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நீங்கள் வழக்கத்திற்கு மாறான மருந்து அல்லது உணவை உட்கொண்டால் அது ஒருவரின் உடலை பாதிக்கும்.
ஆனால் ஒரு புத்தகப் பையும் இல்லாமல், ஒரு ஜோடி செருப்பும் இல்லாமல் இருக்கும் மாணவர்கள் இந்த உபகரணங்களை அழிக்கும் செயற்பாட்டை பார்க்கும்போது கவலை அடைவார்கள் அல்லவா என்றார்.
No comments:
Post a Comment