(இராஜதுரை ஹஷான்)
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் பயனாளர்களின் தகவல்களை முறையாக உறுதிப்படுத்தி, வங்கி வைப்பினை சரியான முறையாக ஆரம்பித்துள்ள 08 இலட்சம் பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி திறைசேரி ஊடாக சகல இலங்கை வங்கிகளுக்கும் திங்கட்கிழமை (28) விடுவிக்கப்படும். இதற்கமைய 8 இலட்சம் பயனாளர்களுக்கான ஜூலை மாத கொடுப்பனவு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வரை சமுர்த்தி பயனாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்து வழங்குவதற்கு கொள்கை ரீதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இருந்து நிவாரணம் எதிர்பார்த்துள்ள தரப்பினருக்கு நிச்சயம் நிவாரணம் வழங்குவோம்.
அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகளும், 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு அதிகமான முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றை மீளாய்வு செய்வதற்கு நலன்புரித் திட்ட சபை தற்போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் பயனாளர்களின் தகவல்களை முறையாக உறுதிப்படுத்தி, வங்கி வைப்புக்களை சரியான முறையில் ஆரம்பித்துள்ள 08 இலட்சம் பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி திறைசேரி ஊடாக சகல இலங்கை வங்கிகளுக்கும் திங்கட்கிழமை (28) விடுவிக்கப்படும். இதற்கமைய 8 இலட்சம் பயனாளர்களுக்கான ஜூலை மாத கொடுப்பனவு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும்.
நீரிழிவு நோயாளர்கள், விசேட தேவையுடையவர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்களுக்கு ஜூலை மாதத்துக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க 2664 மில்லியன் ரூபாவை திறைசேரி சகல பிரதேச செயலகங்களுக்கும் வழங்கியுள்ளது.
644783 பயனாளர்களுக்கான ஜூலை மாத கொடுப்பனவு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படுகிறது. ஆகவே பயனாளர்கள் எவ்வித கலக்கமும் இல்லாமல் பிரதேச செயலகங்கள் ஊடாக வழமை போல் தமக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனார்களில் பெரும்பாலானோர் அனுப்பி வைத்துள்ள வங்கி வைப்புக்களின் தகவல்கள் பிழையானவை. ஆகவே தவறுகளை திருத்திக் கொள்ள நலன்புரி சபை உரிய நடவடிக்கைகளை தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் கட்ட பெயர்ப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் இதுவரை பிரத்தியேக வங்கிக் கணக்கை ஆரம்பிக்காமல் இருந்தால் வெகுவிரைவில் புதிய கணக்கை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment