இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் : சேதமாக்கப்பட்ட தாய்மடி ஓய்வில்லமும் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 6, 2023

இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் : சேதமாக்கப்பட்ட தாய்மடி ஓய்வில்லமும்

நூருல் ஹுதா உமர்

ஊடகவியலாளர் சித்தீக் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதோடு, தாய்மடி ஓய்வில்லமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரும் விடயமானது, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அம்பாறை பிராந்திய செய்தியாளரும், "டுடே சிலோன்" ஊடக வலையமைப்பின் பிரதம செய்தி ஆசிரியருமான எஸ்.எம். இஸட் சித்தீக் நேற்று (05) இரவு 07.15 மணியளவில் இனம் தெரியாத சிலரினால் தாக்கப்பட்டார்.

குறித்த செய்தியாளருக்கு சொந்தமான இறக்காமத்தில் காணப்படும் "தாய்மடி" எனும் ஓய்வகத்திற்கு முன்பாக மறைந்திருந்து இனந்தெரியாதோர் தாக்கிய போதும் தலைக்கவசம் அணிந்திருந்ததனால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சித்திக், குறித்த "தாய்மடி" எனும் எனது ஓய்வகத்திற்கு அருகாமையிலும் அதனை அண்டியுள்ள இருள் நிறைந்த பகுதிகளில் இரவு வேளைகளில் மறைந்திருந்து மதுபானம் மற்றும் ஏனைய போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருவதனால் இவற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டேன்.
குறித்த இடத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன் எச்சரிக்கையாக இவற்றை நிறுத்தாவிட்டால் பொலிசாரிடம் தங்களை முறைப்பாடு செய்வேன் என கூறியிருந்தேன்.

அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓய்வகத்தின் வளாகத்தில் காணப்பட்ட மேசைகள் உடைக்கப்பட்டு விடுதியின் கூரைகளும் உடைக்கப்பட்டிருந்ததோடு வானொலிப் பெட்டியும் களவாடப்பட்டு இருந்தது. அதன் பின்னரே நேற்று இரவு குழுவாக வந்த மூவர் என் மீது தாக்குதல் நடத்தினர்.

எனக்கு கொலை அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

குறித்த நபர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிசாரின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். இது தொடர்பில் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment