கல் - எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரத்தில் அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை குறித்த நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கல்லூரியின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் இணைந்து, தாக்கல் செய்துள்ள கல் - எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரம் குறித்த சிவில் வழக்கு, பிரதிவாதிகளின் நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய 7 ஆம் திகதி அத்தனகல்ல மாவட்ட நீதிபதி கேசர சமரதிவாஹர முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆரச்சியுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.
அந்த வழக்கின் பிரகாரம், சட்ட ரீதியான செயலர் என கூறும் நூர் மொஹம்மட் மொஹம்மட் மிப்லி, சட்ட ரீதியான பொருளாளர் எனக் கூறப்படும் அப்துல் ஹமீட் மொஹம்மட் கலீல், அக்கல்லூரியில் கல்வி பயிலும் இரு மாணவியரின் பெற்றோர்களான பிர்தெளவுஸ் மொஹம்மட் புஹாரி, மொஹம்மட் அப்னாஸ் மொஹம்மட் பர்ஹான், குறித்த கல்லூரியின் பழைய மாணவியர் சங்க தலைவி சுல்பிகார் ஜுனைட் மற்றும் செயலாளர் ஜமீலா உம்மா மொஹம்மட் அஷ்ரப் ஆகியோரே மனுதாரர்களாவர்.
வழக்கில் பிரதிவாதிகளாக மொஹம்மட் டில்ஷாத் பாசில், அர்ஷாட் மொஹம்மட் இக்பால், மொஹம்மட் பயாஸ் சலீம், மொஹம்மட் ஜமீல் அஹமட், மொஹம்மட் ரிஷாட் சுபைர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதிவாதிகளுக்காக ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்யக் கோரினார்.
எனினும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பில் ஏற்கனவே இந்த நீதிமன்றம் கடந்த ஜூன் 2 ஆம் திகதி கட்டளை ஒன்றினை பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி, நகர்த்தல் பத்திரத்தை நிராகரிக்குமாறு கோரினர்.
இதன்போது, பிரதிவாதிகளின் சட்டத்தரணி, கல் - எலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரை அப்பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் மன்றில் பிரஸ்தாபித்தனர். அதிபரை நீக்கிய நடவடிக்கைக்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் கடும் எதிர்ப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்த நிலைமை வழக்கு முடியும் வரையில் பேணப்படல் வேண்டும் என ஏற்கனவே காணப்பட்டுள்ள இணக்கம் மீறப்படல் கூடாது என சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அதிபரை நீக்கிய நடவடிக்கையை தடுத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், மனு தொடர்பிலான ஆட்சேபனைகள் இருப்பின் அதனை சமர்ப்பிக்க பிரதிவாதிகளுக்கு கால அவகாசம் அளித்துள்ள நீதிமன்றம், எதிர்வரும் 25 ஆம் திகதி அந்த ஆட்சேபனைகளை முன் வைக்குமாறு (நீதிமன்ற நியாயாதிக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி) பிரதிவாதிகளுக்கு அறிவித்தது.
Vidivelli
No comments:
Post a Comment