13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கோரியுள்ள நிலையில், இது விடயமாக முஸ்லிம் தரப்புகள் சமூக விவகாரங்களில் ஒரே நிலைப்பாட்டுடன் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
அத்தோடு, முஸ்லிம் அரசியல் தரப்புகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினை தீர்வுப் பொறிமுறை ஊடாக முஸ்லிம் தரப்புக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கு அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகார பரவலாக்கல் விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியான முனைப்பினை காட்டி வருகிறார். தமிழ் தரப்பினருடனான பேச்சுவார்த்தைகள், இந்திய பிரதமருடனான உயர்மட்ட கலந்துரையாடல், சர்வ கட்சி மாநாடு என அவரது முனைப்புகள் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளன.
அரசியல் தீர்வுகளை பேசுகின்ற அதேவேளை தமது மக்களின் சமகால பிரச்சினை தொடர்பிலும் தமிழ் தரப்பு ஜனாதிபதியுடன் மிகத் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பேசி வருகின்றனர். அதன் விளைவாக காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் சிலரின் விடுதலை என சில இடைக்கால தீர்வுகளையும் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். இது தொடரில் மற்றுமொரு வேண்டுகோளினை ஜனாதிபதி இப்போது முன் வைத்துள்ளார்.
13 வது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தத்தமது இறுதி அபிப்பிராயங்களை எழுத்து மூலமாக வழங்குமாறு அரசியல் கட்சிகளிடம் தற்போது அவர் கோரியுள்ளார்.
அரசியல் தீர்வினை பொறுத்தவரையில் ஒவ்வொரு தரப்பும் தமது நிலைப்பாடுகளை தீர்க்கமாக முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் நமது மக்கள் சார்பாக தீர்க்கமாக பேசுவதனை இனி மேலும் தாமதப்படுத்த முடியாது.
அதேவேளை, ‘இது ஒன்றும் நடக்கப் போவதில்லை’ என இந்த முனைப்புகளை புறக்கணிக்கவும் முடியாது. ஏனெனில், தீர்வுகள் எட்டப்படாவிட்டாலும் கூட ஒவ்வொரு அரசியல் பேச்சு வார்த்தைகளின் போதும் முன்வைக்கப்படுகின்ற- பேசப்படுகின்ற விடயங்களே எதிர்கால தீர்வுகளுக்கான அரசியல் அத்திவாரங்களாக மாறுகின்றன.
இந்த அதி முக்கிய அரசியல் காலகட்டத்தில் நாம் நமது நிலைப்பாடுகளை தீர்க்கமாக மட்டுமன்றி ஒருமித்த குரலிலும் பேச வேண்டி உள்ளது. இதனை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது தொடர்பான சில முக்கிய ஆலோசனைகளை உங்களோடு நேரடியாக கலந்துரையாட விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment