(எம்.வை.எம்.சியாம்)
மதத் தலைவர்கள் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டுமே தவிர அரசியல் செய்யக்கூடாது. அவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டு தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அது நாட்டை பாரிய அழிவுக்கு இட்டுச்செல்லும். வீழ்ச்சியடைந்திருந்த நாடு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் நாம் அனைவரும் மத, கட்சி பேதமின்றி பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேஷன் தெரிவித்தார்.
கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, நாம் அதிகாரத்திலிருந்தபோது எமது மக்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். குறிப்பாக மாணவர்களின் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி அதன் மூலம் பன்முகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம்.
கல்வியின் மூலமே சிறந்த எதிர்கால சமூகத்தை உருவாக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருப்பினும் இன்றைய தலைவர்கள் மக்களிடத்தில் நேரடியாக கலந்துரையாடுவதனை விட்டுவிட்டு தொலைக்காட்சிகளிலும், முகப்புத்தகங்களிலும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அவ்வாறு இல்லை. நேரடியாக மக்களிடத்திற்கு சென்று அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவோம். ஆட்சியாளர்களிடத்தில் நேர்மை காணப்பட வேண்டும். அதன் மூலமே சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும். நாம் அவ்வாறே இருந்தோம். இனியும் இருப்போம்.
எதிர்காலத்தில் அதிகளவிலான இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும். இதன் மூலம் அரசியலில் புதிய மாற்றமொன்றை உருவாக்க முடியும். இருப்பினும் துரதிஷ்டவசமாக அரசியல்வாதிகளை விட மதத் தலைவர்களே அதிகம் அரசியல் பேசுகிறார்கள். விகாரையில் உள்ள பிக்குகள் வீதிக்கு வந்து அரசியல் செய்கிறார்கள். மதத்தை போதிப்பதை விடுத்து அரசியல் செய்கிறார்கள்.
அதேபோன்று அண்மையில் கொழும்பு பேராயர் இந்திய - இலங்கை பாலம் தொடர்பில் கருத்து தெரிவித்தார். சர்வசன வாக்குரிமைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். நான் அவரை மதிக்கிறேன். இருப்பினும் மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அரசியல் செய்வது பொருத்தமற்றது.
இந்த பாலம் அமையப்பெற்றால் எமது நாட்டு மக்கள் நன்மை அடைவார்கள். மதத் தலைவர்கள் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டுமே தவிர அரசியல் செய்து தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அது நாட்டை பாரிய அழிவை நோக்கி கொண்டு செல்லும்.
எதிர்காலத்தில் எந்த கட்சிக்கு ஆதரவு என பலர் எம்மிடத்தில் கேட்கின்றனர். நாம் எவருக்கும் ஆதரவு கிடையாது. தேர்தலில் இணைந்து பயணிப்போம். எமது கொள்ளைகளும் அவர்களது கொள்கைகளும் வேறு. ரணிலிடமும், சஜித்திடமும் இனவாதம் காணப்படுகிறது.
சஜித் மகாநாயக்க தேரர்களிடமும், பெரும்பான்மை சமூகத்திடமும் 13 தொடர்பில் ஒன்றை கதைக்கிறார். சிறுபான்மை தலைவர்களிடம் வேறொன்றை கதைக்கிறார்.
ரணில் தேர்தலை பிற்போட்டு தனது தோல்வியை தள்ளிப்போட்டுக் கொண்டே செல்கிறார். அவரிடத்தில் அரசியல் தந்திரம் இருக்கிறது. ராஜபக்ஷக்களிடம் கொள்ளையிடும் பழக்கம் உள்ளது. அனுரவிடம் எந்தவொரு திட்டமும் கிடையாது. ஆனால் பேச்சுக்களுக்கு மட்டும் குறைவில்லை.
எந்தவொரு கட்சியாலும் தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற முடியாது. நாடு முன்பிருந்த நிலையில் விடுபட்டு முன்னோக்கி செல்லும் சந்தர்ப்பத்தில் நாட்டை கட்டியெழுப்ப கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனக்கு என்றும் எமது கட்சிக்கு என்றும் கொள்கைகள் காணப்படுகிறது. அதனூடாகவே நாம் பயணிப்போம் என்றார்.
No comments:
Post a Comment