(இராஜதுரை ஹஷான்)
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என சபாநாயகர் விடுத்த அறிவிப்பு முற்றிலும் தவறானதுடன் எதிர்காலத்துக்கான பாரதூரமான எடுத்துக்காட்டு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நீதிமன்றத்தின் மீது நிறைவேற்றுத்துறை பல்வேறு வழிமுறைகளில் அழுத்தம் பிரயோகிப்பதை தற்போது அவதானிக்க முடிகிறது.
நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தற்போது வெகுவாக சிதைவடைந்துள்ள நிலையில் நீதித்துறையின் மீது மாத்திரமே மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
நீதிமன்றத்தை சவாலுக்குட்படுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படுவதை தற்போது அவதானிக்க முடிகிறது.
அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்தை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு அமைய எந்த நீதிமன்றத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாது என சபாநாயகர் குறிப்பிட்டது தவறானதொரு அறிவிப்பாகும்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் அமைச்சரவையால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு யோசனையே தவிர சட்டமூலம் அல்ல. ஆகவே நிறைவேற்றப்பட்ட ஒரு யோசனைக்கு சட்டமூலத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏதும் கிடையாது.
நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சபாநாயகரின் அறிவிப்பு காணப்படுகிறது.
இந்த அறிவிப்பு எதிர்காலத்துக்கும் ஒரு பாரதூரமான தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும். நிதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment