நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை பருவகால நிகழ்வு, எனவே இதில் அரசியல் இலாபம் தேட எவரும் முயற்சிக்க வேண்டாமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
எல்லாவற்றையும் அரசியல் மயப்படுத்தினாலும் மக்கள் பாதிப்புக்களை அரசியல் மயப்படுத்த வேண்டாமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டில் தற்பொழுது காணப்படும் வரட்சி நிலைமைக்கு முகம் கொடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாக துறைசார் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுடனான கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் விளக்கம் அளிக்கையில்,
நாட்டில் 13 மாவட்டங்களில் 50,535 குடும்பங்களைச் சேர்ந்த 166,904 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அந்தந்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் நன்றி தெரிவித்தார்.
காலநிலையில் ஏற்படும் பருவகால மாற்றங்களினால் நாட்டில் வரட்சியான காலநிலை நிலவுகிறது மேலும் எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பருவ மழையுடன் நிலைமை மேம்படும்.
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, நீர்ப்பாசன அமைச்சு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, விவசாய அமைச்சு, கமநல அபிவிருத்தி திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மகாவலி அதிகாரசபை, மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுடன் நாங்கள் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர், நாட்டின் பல பகுதிகளில் இருந்து இதுவரை 58 காட்டுத் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித நடவடிக்கைகளால் ஏற்படுவதாகவும் கூறினார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே கருணாநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஹர்ஷ விதானராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment