தேசிய சொத்துக்களை விற்று உண்ண வேண்டாம் : நாட்டில் சர்வதிகார ஆட்சியே இடம்பெறுகிறது - பேராயர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 3, 2023

தேசிய சொத்துக்களை விற்று உண்ண வேண்டாம் : நாட்டில் சர்வதிகார ஆட்சியே இடம்பெறுகிறது - பேராயர்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்று அதன் ஊடாக பணத்தைப் பெற்று உணவு உண்ண வேண்டும் என்பதை ஊக்குவிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இன்று நாட்டில் மக்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமையளிக்காது சர்வதிகார ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனைத் தெரிவித்தார்.

பேராயர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலத்துக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 120 பேர் மாத்திரமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏனையோர் முடியாது என்றும், சிலர் எதுவுமே தெரிவிக்காமலும் பின்வாங்கியுள்ளனர். எனவே குறித்த சட்டமூலம் பெரும்பாலான மக்களின் விருப்பத்துடன் நிறைவேற்றப்படவில்லை.

இந்த சட்டமூலத்தின் ஊடாக மக்களின் பணத்தை தனது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் இதுவரையிலும் அது தொடர்பில் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால் எவருக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

மக்களின் விருப்பத்துக்கு முன்னுரிமையளிக்காத, ஜனநாயகம் முடக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சியே தற்போது காணப்படுகிறது.

நாட்டில் உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்று அதன் ஊடாக பணத்தைப் பெற்று உணவு உண்ண வேண்டும் என்பதை ஊக்குவிக்கக் கூடாது.

ஆனால் இந்த அரசாங்கம் அதனையே செய்து கொண்டிருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மாத்திரமின்றி சகலருக்கும் இது பொருந்தும். இந்த நிலைமையை மாற்றியமைக்காவிட்டால் இனிவரும் காலங்களில் முற்றுமுழுதாக ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நாடாக இலங்கை மாற்றமடைந்து விடும்.

இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களில் அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறன்றி 2048 இல் இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாகும் என்று போலியான கனவை எமக்கு வழங்க முயற்சிக்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment