(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் பலவந்தமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இரவு 9 மணிக்கு பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக்கூறப்பட்டபோதிலும், 7.30 க்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் காரணமாகவே எதிர்க்கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த சந்தர்ப்பத்தில் சபையில் காணப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலம் பலவந்தமாகவே நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் முழுமையான விவாதம் நிறைவடைந்த பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால் திடீரென 7.30 மணியளவில் சகல விவாதங்களை நிறுத்தி வாக்கெடுப்புக்கு செல்வதாக அறிவித்தார். இதனால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் சபையில் இருக்கவில்லை.
தேசிய கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 12 டிரில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது இவ்வாறு பாரிய சுமையை சுமத்தியிருப்பது பெரும் தவறாகும்.
சர்வதேசத்திடம் கடன் பெற்று தமது ஆட்சியை மேலும் சில ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையையே அரசாங்கம் இதன் மூலம் எடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இது தொடர்பில் எந்தவொரு நிபந்தனையும் இல்லை. இதன் மூலம் அரசாங்கம் பலவந்தமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை காணப்படுவதால் எம்மால் அதனை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது.
9 மணிக்கு பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியதன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை. மாறாக வேறு எந்தக் காரணமும் கிடையாது. தேர்தல் மூலமே அனைத்துக்கும் தீர்வு காண முடியும். தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதன் மூலம் மக்களின் விருப்பத்தை அறிய முடியும் என்றார்.
No comments:
Post a Comment