பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 2, 2023

பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - மைத்திரி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் சில வாரங்கள் மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளா‍ர்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.

இறுதி யுத்தத்தின் வெற்றியில் தனக்கும் கணிசமான பங்கு இருப்பதாக கடந்த காலங்களில் தெரிவித்து வந்த மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய இக்கருத்து முற்றிலும் முரணாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடக சந்திப்பில் யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment