(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜூன மகேந்திரன் திருமண விழாவுக்கு சென்றுள்ளார். நாட்டுக்கு திரும்பி வருவார். உதயங்க வீரதுங்கவை போல் தப்பிச் செல்லமாட்டார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார். 8 ஆண்டுகள் கடந்தும் அர்ஜூன மகேந்திரன் நாடு திரும்பவில்லை. அவர் இன்றும் திருமண விருந்தில் பங்குகொள்கிறாரா என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைதிகள் பரிமாற்றல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் இவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியால் 11 பில்லியன் ரூபாய் வருவாய் இழக்கப்பட்டுள்ளது என கணக்காளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பிணைமுறி மோசடியில் பிரதான சந்தேக நபராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டுக்கு தப்பிச் சென்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதாக நல்லாட்சி அரசாங்கமும், 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அவர் நாட்டுக்கு அழைத்து வரப்படவில்லை.
பிணைமுறி மோசடி விவகாரத்தில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு வருகை தரவில்லை. ஆனால் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளில் இரண்டு வழக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி 'மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இதன் உண்மைத்தன்மை என்ன' என வினவினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் (தற்போதைய ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்க 'அர்ஜூன மகேந்திரனை கடந்த வாரம் சந்தித்தேன், திருமண விழாவில் கலந்து கொள்ள சிங்கப்பூர் நாட்டுக்கு செல்வதாக குறிப்பிட்டார். அவர் திரும்பி வருவார். உதயங்க வீரதுங்கவைபோல் தப்பிச் செல்ல மாட்டார்' என்றார்.
உதயங்க வீரதுங்க நாட்டுக்கு வந்து நீதிமன்றத்துக்கும் சென்றார், செல்கிறார். ஆனால் அர்ஜூன மகேந்திரன் 08 ஆண்டுகள் கடந்தும் நாட்டுக்கு வரவில்லை. ஆகவே அவர் இன்னும் திருமண விருந்து சாப்பிடுகிறாரா, ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதை காலம் நிரூபித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment