வடக்கு, கிழக்கில் நீண்ட கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்கள் பலவும் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு ஆறுதல் நலன்புரி நிவாரணத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் ‘அஸ்வெசும’ எனப்படுகின்ற ஆறுதல் நலன்புரி நிவாரணத் திட்டம் என்கின்ற நலன்புரி நிவாரணத் திட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், பயனாளிகளின் தேர்வு தொடர்பில் தற்போதைக்கு சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான மேன்முறையீடுகளும், சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆட்சேபனைகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
அதேநேரம் மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிப்பதற்கென அரசாங்கம் இம்மாதம் 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தற்போதைய தேர்வு தொடர்பில் மக்கள் தங்களது மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
மேற்படி“ஆறுதல்” நலன்புரி நிவாரணத் திட்டத்தில் தகுதியுடைய எவரையும் கைவிடக்கூடாது என்பதே எமது ஜனாதிபதி அவர்களது நிலைப்பாடாகும்.
அத்துடன் இத்தகைய நிவாரணத் திட்டங்கள் அதன் மூலமான பயனாளிகளை சுய வாழ்வாதார ஈட்டலுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனினும், எமது நாட்டில் இத்தகைய பயனாளிகள் தொடர்ந்தும் நிவாரணங்களை எதிர்பார்த்தவர்களாகவே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த “ஆறுதல்” நலன்புரி நிவாரணத் திட்டமானது, ஓரிரு வருடங்களில் அதன் மூலமான பயனாளிகளை சுய செயற்பாட்டாளர்களாக மாற்றும் என்ற நம்பிக்கை தென்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment