கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவோம் : எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவோம் : எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் - செஹான் சேமசிங்க

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படாது. அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றி பெறுவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின்போது தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வங்கிக் கட்டமைப்பு பாதிக்கப்படும். அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள்.

பாரிய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இருந்து நாடு தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இரு தரப்பு மற்றும் பல்தரப்பு மட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

தேசிய கடன் மறுசீரமைப்பின்போது மூன்று பிரதான தடைகள் காணப்பட்டன. 128 சதவீதமாக காணப்படும் மொத்த தேசிய கடன்களை 2032 ஆம் ஆண்டு 95 சதவீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

34.6 சதவீதமாக காணப்படும் மொத்த நிதி தேவைப்பாட்டை 2027 ஆம் ஆண்டு 13 சதவீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன், 9.4 சதவீதமாக காணப்படும் வெளிநாட்டு சேவை கடன்களை எதிர்வரும் காலப்பகுதிகளில் 4.5 சதவீதமாக நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகளே பிரதான தடைகளாக காணப்பட்டன.

பாரிய நிதி நெருக்கடியால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட கடன் வழங்குநர்களின் கடன் செலுத்தல் இரத்து செய்யப்பட்டன.

பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தவிர மாற்றுத்திட்டம் ஏதும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் டொலர் கடன் தவணை கிடைத்தவுடன் நாட்டின் கடன் நிலை உறுதிப்படுத்தப்பட்டது.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பொருளாதார மீட்சிக்காக சமூக கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வரி வீதம் அதிகரிக்கப்பட்டது. எரிபொருளுக்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துடன், திறைசேரிக்கு சுமையாக உள்ள நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மொத்த வெளிநாட்டு கடன்களில் 17 பில்லியன் டொலரை எதிர்வரும் ஐந்தாண்டு காலங்களுக்கு குறைத்துக் கொள்ளுமாறு பிரதான நிலை சர்வதேச கடன் வழங்குநர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஆகவே, சர்வதேச கடன்களை மறுசீரமைத்தால் மாத்திரம் பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண முடியாது என்ற காரணத்தால் தேசிய கடன்களை மறுசீரமைக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்படுவதால் வங்கி கட்டமைப்புக்கும், வங்கிகளின் ஸ்திர நிலைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அத்துடன் ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஊழியர் சேமலாப நிதியத்தில் 14 சதவீதம் வரி வழங்கப்பட்டது.

தற்போது 09 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எதிர்வரும் காலப்பகுதியில் சந்தை வட்டி வீதத்துக்கு அமைய ஈ.பி.எப் வட்டி வீதம் தீர்மானிக்கப்படும்.

தேசிய கடன் மறுசீரமைப்பால் தமது வங்கி வைப்புக்கு பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்தின் தீர்மானங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ஆகவே, தேசிய கடன் மறுசீரமைப்பு எவருக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் என்றார்.

No comments:

Post a Comment