விவசாயிகளால் பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்யாத பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவ்வாறானவர்களின் வரி அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படுமென்றும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்களின்றி விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விற்பனைக்காக நேரடியாக கொண்டுவரும் பொழுது அந்த மத்திய நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் அவற்றை கொள்வனவு செய்யாமல் நிராகரித்து வருவதாக விவசாய அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்கள் சிலர் விவசாய சமூகத்தினர் மற்றும் நுகர்வோரையும் சுரண்டும் வகையில் வேலைத்திட்டமொன்றை பொருளாதார மத்திய நிலையங்களில் முன்னெடுத்து வருவதாக குறித்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையின் ஒரு அம்சமாக இடைத்தரகர்களின் ஒத்துழைப்பின்றி உற்பத்திப் பொருட்களை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விற்பனை செய்வதற்கு விரைவாக வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தவறும் பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள விற்பனை கூடங்களில் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டு அவற்றை வேறு நபர்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment