வருடம் ஒன்றுக்கு 525 கோடி ரூபாவைஇழந்து விடும் அரச வருமானத்துறை : தடுத்து நிறுத்த ஜனாதிபதியை கோரும் பீடி உற்பத்தியாளர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

வருடம் ஒன்றுக்கு 525 கோடி ரூபாவைஇழந்து விடும் அரச வருமானத்துறை : தடுத்து நிறுத்த ஜனாதிபதியை கோரும் பீடி உற்பத்தியாளர் சங்கம்

சட்ட விரோதமான முறையில் பீடி இலை நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதால் வருடமொன்றுக்கு இழக்கப்படும் சுமார் 525 கோடி ரூபா வரி வருமானத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை பீடி, சுருட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் பீடி, புகையிலை இறக்குமதியாளர்கள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பீடி சுற்றுவதற்காக சட்ட ரீதியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டெண்டு இலைக்கு ரூ. 6000.00 செஸ் வரி அறவிடப்படுவதோடு ஒரு கிலோ இலையின் விலை சுமார் ரூ. 9,500.00 வாக உள்ளது என்றும் அந்த சங்கத்தினர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அக்கடிதத்தில், ‘சட்ட விரோதமான முறையில் படகுகளில் கொண்டு வரப்படுகின்ற தரங்குறைந்த டெண்டு இலையை சுமார் 5700.00 ரூபாக்கு கருப்பு சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகிறது. அதனால் பீடி இலையின் சட்ட விரோத இறக்குமதியை தடுத்து நிறுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும்.

சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்படும் டெண்டு இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் பீடி சந்தையில் புழக்கத்தில் உள்ளது.

அவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் சட்ட ரீதியான முறையில் பீடி தயாரிப்பை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அதனால் பீடி இலைக்காக அறவிடப்படும் செஸ் வரியை நீக்கி பீடியொன்றுக்காக ரூ. 3.50 சதம் படி நேரடி வரி அறவீடு செய்யுமாறு சங்கத்தினர் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பீடியொன்றுக்கு நேரடியாக ரூ. 3.50 சதப்படி வரி அறிவீடு செய்யப்படும் போது வருடமொன்றுக்கு அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைக்கப்பெறும் அது தற்போது கிடைக்கப்பெறும் வரி வருமானத்தை விடவும் 353 கோடி ரூபா மேலதிகமானதாக இருக்கும்.

பீடி இலை இறக்குமதி செய்பவர்களுக்கு அவர்களது பெயரில் அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் சட்ட ரீதியான முறையில் பீடி இலை இறக்குமதி செய்யப்படுவது கலால் திணைக்களத்தின் முழுமையான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் மூலம் இடம்பெற வேண்டும்.

மேலும் பீடி இலை இறக்குமதியாளர்களிடம் காணப்படும் பீடி இலையின் அளவை அறிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பீடிக்கைத்தொழில் துறையைப் பாதுகாப்பதற்காக பீடியின் விலையை அதிகரிப்பது கட்டாயமானது. இரண்டு அங்குல சிகப்பு நூலுடன் கூடிய சிறிய பீடியொன்றை ரூ.12.50 சதத்திற்கும், இரண்டேகால் அங்குல நீளமான பீடியொன்றை ரூ.15.00 க்கும், இரண்டரை அங்குல பீடியொன்றை ரூ.16.00 க்கும் சில்லறை விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

என்றாலும் குறைந்த விலையில் சந்தையில் காணப்படுவது தரம் குறைந்த பீடியாகும். அதனால் வியாபாரிகள் சட்ட ரீதியாகவும் தரமான முறையிலும் உற்பத்தி செய்யப்படும் பீடிகளை மாத்திரம் விற்பனை செய்வதன் மூலமே இக்கைத்தொழில் துறையைப் பாதுகாக்க முடியும்.

அதேநேரம் பதிவிலக்கம் இல்லாத பீடி விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக கலால் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு தேடுதல்களையும் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment