தேரர்களின் நடத்தை இந்நாடு மத சார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது - மனோ கணேசன் எம்பி - News View

About Us

About Us

Breaking

Friday, July 7, 2023

தேரர்களின் நடத்தை இந்நாடு மத சார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது - மனோ கணேசன் எம்பி

பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த ஆமதுரு மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன ஆமதுரு என்ற தேரர்கள், மட்டக்களப்பில் பொலிசாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன ஆமதுரு ஆகிய மூவரும் அரசியல் தேரர்கள். இந்த சம்பவங்களை செய்த சமீப கால தேரர்களின் நடத்தை, இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேரர்கள் மீது சமூகத்தில் எழுந்து வரும் விமர்சனங்கள் தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது, ஏனெனில் இந்த அரசியல் தேரர்கள், சமகாலத்தில் இந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் நடைபெறுவதை, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை, எப்போதும் எதிர்க்கும் அணியில் இருந்துள்ளனர். இனவாதத்தை கிளப்பும் அணியில் இருந்துள்ளனர். அதனாலேயே விசேட சலுகை அதிகாரம் பெற்று எவற்றையும் செய்து தப்பலாம் என்றும், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக எல்லையற்ற அதிகாரத்தை கொண்டு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

இலங்கையில் அகப்பட்ட சுமன ஆமதுரு சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும். பாலியல் சுதந்திரம் என்பது பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம். ஆகவே பெண்கள் மீதான தாக்குதல் பிழையானதாகும். அதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால், இதை முன்னிலைப்படுத்தி இந்த பிக்கு தப்பி விடக்கூடாது. இலங்கையில் இருப்பது தேரவாத பெளத்தம். உலகில் தேரவாத பெளத்தத்தின் தலைமையகம் இலங்கைதான். தேரவாத துறவிகளுக்கு, மத ரீதியாக பாலியல் உறவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் மஹாயான பெளத்த துறவிகளுக்கு இத்தகைய தடை கிடையாது.

ஆகவே இது இலங்கை பெளத்தத்துக்கு உள்ளே பெரும் சிந்தனை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையை, பெளத்த துறவிகளின் நடத்தை பற்றிய சீர்திருத்தங்களை, இலங்கையின் சிங்கள பெளத்த சகோதரர்களும், அவர்களது மதத் தலைவர்களும் பார்த்து கொள்ளட்டும். இதில் நாம் தலையிட தேவையில்லை.

ஆனால், நாட்டின் தேசிய நடத்தை மற்றும் அரசியல் சமூக சீர்த்திருத்தம் பற்றிய விவகாரங்கள் எமது பிரச்சினையுமாகும். இதில் நமது அக்கறை இந்நாட்டின், அரசியல் மறுசீரமைப்பில், "இது செய்யலாம்" "இதை செய்யக்கூடாது" என இந்த ஆமதுரர்கள் இனியும் கூற வரக்கூடாது, என்பதாகும்.

நான் எப்போதுமே, எந்த மதமும் அரசியலில் நேரடியாக தொடர்புபடக்கூடாது என கூறி வருகிறேன். இந்நாடு "மத சார்பற்ற" நாடாக வேண்டும் எனவும் ரொம்ப நாளாகவே கூறி வருகிறேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்நாட்டின் சிங்கள முற்போக்காளர்களுடன் இணைந்து அரசியலில் மதச் சார்பற்ற கொள்கையை நாம் முன்னெடுக்க வேண்டும். அமைதி காக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதில் கரங்கோர்க்க வேண்டும். மத சார்பின்மை என்பதற்குள்ளே இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஒளிந்திருக்கின்றன என நான் நம்புகிறேன்.

No comments:

Post a Comment