(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொள்கை ரீதியில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது நாட்டுக்கு பொருத்தமற்றது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் வரையறை செய்யப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்கு விசாரணைகள் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு ஒரு தடையாக உள்ளன.
வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு குறைந்தபட்சம் நான்கு ஆண்டு காலமேனும் செல்கிறது.
வழக்கு விசாரணைகள் தாமதப்படும்போது பாதிக்கப்படும் தரப்பினர் ஒட்டு மொத்த அரச கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிப்பார்கள். நடைமுறையில் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது.
நாடு என்று முன்னேற்றமடைய வேண்டுமாயின் வணிக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என 1996 ஆம் ஆண்டு ஆட்சியில் அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து வணிக மேல் நீதிமன்றத்தை ஸ்தாபித்தது. இந்த நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
நாட்டில் மொத்த சனத் தொகைக்கும், நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக காணப்பட்டது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் அந்த எண்ணிக்கை 17 ஆக அதிகரிக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கையின் தாமதநிலை நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்து விடக்கூடாது. பௌதீக மற்றும் மனித வளத்தை அடிப்படையாகக் கொண்டு காணப்படும் குறைபாடுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தினால் பல விடயங்களை துரிதமாக செயற்படுத்திக் கொள்ளலாம்.
அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது முறையற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தை அப்போது எவரேனும் அடிப்படை உரிமை மீறல் என்று நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது.
அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நடைமுறையில் செயற்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆகவே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களின் விடயதானங்கள் வரையறை செய்யப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment