விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே கூட்டமைப்பு இன்றும் செயற்படுகிறது - சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே கூட்டமைப்பு இன்றும் செயற்படுகிறது - சரத் வீரசேகர

(எம்.மனோசித்ரா)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவேதான் அரசாங்கம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் கூட்டமைப்பு அதனை எதிர்க்கின்றது. தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ, நம்பிக்கை பொறுப்பு நிதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மத்திய வங்கி ஆளுனரும் மிகத் தெளிவாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனவே மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை.

55 வயதின் பின் ஓய்வு பெறும் எவருக்கும் எவ்வித சிக்கலும் இன்றி தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும், எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும். கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் எம்.பிக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர். எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என்றார்.

No comments:

Post a Comment