குளிர் அறையில் இருந்து வட்ட மேசை பேச்சு ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டதல்ல : நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்கிறது தொழிற்சங்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

குளிர் அறையில் இருந்து வட்ட மேசை பேச்சு ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டதல்ல : நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்கிறது தொழிற்சங்கங்கள்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச ஒருமித்த தொழில் சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது. அரசியல்வாதிகளின் சண்டித்தனம், ஊழல் மோசடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஆகிய காரணிகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதில்லை. அரசாங்கத்தின் முயற்சியை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

உத்தேச ஒருமித்த தொழில் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை (14) தொழில் அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டன.

வங்கி சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க குறிப்பிட்டதாவது, தொழிற்சங்கங்கள், தொழில் உரிமை நியாய சபைகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல் நடைமுறையில் உள்ள தொழில் சட்டங்கள் அனைத்தையும் இரத்துச் செய்து அதற்கு பதிலாக ஒருமித்த தொழில் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழில் உரிமைகள் குளிர் அறையில் இருந்து வட்ட மேசை பேச்சுவார்த்தை ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டதொன்றல்ல என்பதை தொழில் அமைச்சர் உட்பட ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

போராட்டங்கள், உயிர்த் தியாகங்கள் என்பவற்றின் பிரதிபலனாக தொழில் உரிமைகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பிற்பட்ட காலங்களில் சட்டமாக்கப்பட்டன.
நடைமுறையில் உள்ள தொழில் சட்டங்களினால் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு கிடைப்பதில்லை என தொழில் அமைச்சர் குறிப்பிடுகிறார். இலங்கையை காட்டிலும் பன்மடங்கு கடினமான தொழில் சட்டங்கள் வியட்நாம் நாட்டில் காணப்படுகிறது. அங்கு வெளிநாட்டு முதலீடுகள் செல்வதில்லையா?

அரசியல்வாதிகளின் சண்டித்தனம், ஊழல் மோசடி, அரசியல் ஸ்திரமற்ற நிலை ஆகிய காரணிகளால்தான் இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவதில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அரசியல்வாதிகள் கப்பம் பெறும்போது எவ்வாறு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்கள்.

இந்த முறையற்ற தன்மையை நீக்கிக் கொள்வதை விடுத்து தொழில் உரிமைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது முறையற்றது.

தேசிய கடன் மறுசீரமைப்பால் உழைக்கும் மக்களின் இறுதி சேமிப்பாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் மீதும் கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தொழில் உரிமைகளையும் அரசாங்கம் விட்டு வைக்கவில்லை.

ஆகவே உத்தேச ஒருமித்த தொழிலாளர் சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது. சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment